ராமேசுவரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது


ராமேசுவரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது
x

ராமேசுவரத்தில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் ராமநாதசுவாமி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து 3-ம் பிரகாரத்தில் தேங்கியது.

ராமேசுவரம்,

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சில பகுதிகளில் நேற்று காலை மழை பெய்தது. குறிப்பாக ராமேசுவரத்தில் பலத்த மழையாக கொட்டியது.

காலை 10 மணி அளவில் தொடங்கி, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது.

கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது

மழையால் ராமேசுவரம் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. அதாவது, கோவிலின் மேல்தளத்தில் இருந்து விழுந்த தண்ணீர், 3-ம் பிரகாரத்தில் சுவர்களில் விழுந்து நேராக அந்த பிரகார பாதையில் வந்து தேங்கியது. மழைநீரில் நடந்து பக்தர்கள் 3-ம் பிரகாரத்தை வலம் வந்தனர்.

இதேபோல் கோவிலின் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதியிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் அந்த வழியாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர். 3-ம் பிரகாரம் மற்றும் ரத வீதிகளில் தேங்கிய மழை நீரை வாருகால் வழியாக வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.

மக்கள் மகிழ்ச்சி

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலின் உப கோவிலான லட்சுமணேசுவரர் கோவிலை சுற்றியும் மழைநீர் தேங்கி நின்றது.

சில மாதங்களாக மழையே பெய்யாமல் வெயில் வாட்டி வதைத்து வந்தநிலையில் நேற்று பெய்த இந்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story