2-வது நாளாக வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீர்


2-வது நாளாக வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீர்
x

அரியூர் அம்மையப்பன் நகரில் 2-வது நாளாக வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட அரியூர் அம்மையப்பன் நகரில் 300-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். மாண்டஸ் புயலினால் பெய்த பலத்த மழையினால் அரியூர் ஏரி நேற்று முன்தினம் நிரம்பி, அதில் இருந்து உபரிநீர் வெளியேறியது.

உபரிநீர் செல்ல உரிய கால்வாய் வசதி இல்லாததால் அம்மையப்பன் நகரில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. மாநகராட்சி ஊழியர்கள் தெருவின் ஓரம் கால்வாய் வெட்டி ஏரி உபரிநீரை தொரப்பாடி ஏரிக்கு திருப்பி விட்டனர். அதனால் குடியிருப்பு பகுதிக்கு ஏரி உபரிநீர் செல்வது தடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். கால்வாய்கள் உடனடியாக தூர்வாரப்பட்டு தேங்கி நின்ற மழைநீர் அங்கிருந்து செல்வதற்கான வழிவகை செய்யப்பட்டன. ஆனாலும் சில தெருக்களில் வீட்டை சுற்றி மழைநீர் தேங்கி நின்றது. அதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே சென்று வருவதற்கு சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் பெரும்பாலான வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நின்றது. மழைநீர் வடிந்து விடும் என்று எதிர்பார்த்த பொதுமக்கள் நேற்று காலை ஏமாற்றம் அடைந்தனர். குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story