ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது


ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது
x

திருமயம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது

திருமயம் அருகே ஊனையூரில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்தநிலையில், சுரங்கப்பாதையில் மழைநீரி அடிக்கடி நிரம்பியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைபட்டது. மேலும், அப்பகுதி பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ரெயில்வே துறை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியோர்கள் உள்ளிட்டவர்கள் அவசரத்திற்கு கூட வெளியில் செல்ல முடியாமல் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டி உள்ளது. இந்நிலையில் தற்போது பெய்த மழையில் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. பின்னர் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று திருச்சி- ராமேசுவரம் பைபாஸ் சாலையில் ஊனையூர் விளக்கு அருகே மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் ரெயில்வே துறை அதிகாரிகள் வந்து உறுதி அளிக்காத வரை சாலை மறியலை கைவிட போவதில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே துறை அதிகாரிகள் தற்காலிகமாக பொதுமக்கள் சுரங்கப்பாதையை கடக்க ஏற்பாடு செய்வதாகவும், கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த வரும்படியும் கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்று கொண்ட அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருச்சி- ராமேசுவரம் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story