ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்; பொதுமக்கள் அவதி
பழனி அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பழனி அருகே நாகூர்பிரிவில் இருந்து லட்சலப்பட்டி செல்லும் பாதையில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. நாகூர்பிரிவு, தாளையூத்து உள்ளிட்ட பகுதியில் இருந்து பாப்பம்பட்டி, அய்யப்பாளையம் செல்லும் விவசாயிகள், மாணவர்கள் இந்த வழியாக சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இந்த மழை காரணமாக லட்சலப்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, லட்சலப்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.