வைத்தீஸ்வரன்கோவிலில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
வைத்தீஸ்வரன்கோவிலில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட்டனர்
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட தோட்டமானியம் பகுதி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு முதல் தொடர்ந்து பெய்த மழையால் இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று மாலை சிதம்பரம்- மயிலாடுதுறை சாலையில் வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையம் எதிரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும், பேரூராட்சி சார்பில் சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும், கோவில் இடங்களில் வசிக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேரூராட்சி சார்பில் மழை நீர் அகற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அந்தபகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.