மழையூர் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்


மழையூர் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்
x

மழையூர் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை

நிவாரணம்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மழையூர் பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், மழையூர் பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் 60 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் அரசால் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த நிவாரணம் மழையூர் பகுதி மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

335 மனுக்கள்

இதேபோல பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 335 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் மாவட்ட தாட்கோ அலுவலகம் சார்பில், ஒரு பயனாளிக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பிலான மகப்பேறு உதவித்தொகை மற்றும் ஒரு பயனாளிக்கு தூய்மை பணியாளர் நலவாரிய அட்டையினை, அவர் வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) முத்துரெத்தினம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மயங்கி விழுந்தார்

கே.புதுப்பட்டியை சேர்ந்த அழகர் என்பவர் கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு இரு சக்கரவாகனத்தில் வந்த போது நிலைதடுமாறி மயங்கி கீழே விழுந்தார். அவரை பாதுகாப்பு பணியில் இருந்த திருக்கோகர்ணம் போலீசார் உடனடியாக மீட்டு தண்ணீர் கொடுத்து முதல் உதவி செய்தனர். அவர் மயக்கம் தெளிந்து ஆசுவாசப்படுத்திய பின் புறப்பட்டு சென்றார்.


Next Story