அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி
பள்ளி கல்வித்துறையின் சார்பில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு மாவட்ட அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் விளம்பர பதாகைகள், துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
அரசு நலத்திட்டங்கள்
மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதை மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு பணி மேற்கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படுகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
மேலும் பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது, விலையில்லா பாட நூல்கள், பாட குறிப்பேடுகள், 4 இணை சீருடைகள், புத்தகப் பைகள், வண்ணப் பென்சில்கள், காலணிகள், இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
விழிப்புணர்வு
பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு வீடு வீடாக சென்று அரசு பள்ளியின் சாதனைகள், கட்டமைப்பு வசதிகள், நலத்திட்டங்கள், கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது மற்றும் நம் பள்ளி, நம் பெருமை என்ற வலைதள செயலி குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க செய்திட வேண்டும்.
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றார்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மாதேஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செல்வி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கோபி, மாவட்ட கல்வி அலுவலர்கள் கள்ளக்குறிச்சி சிவராமன், திருக்கோவிலூர் சாந்தி, உளுந்தூர்பேட்டை (பொறுப்பு) கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் குமரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.