குழந்தை திருமணத்தை தடுக்க கிராம சபை கூட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - மாநில மகளிர் ஆணையத்தலைவர் பேச்சு


குழந்தை திருமணத்தை தடுக்க கிராம சபை கூட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் -  மாநில மகளிர் ஆணையத்தலைவர் பேச்சு
x

குழந்தை திருமணத்தை தடுக்க கிராம சபை கூட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாநில மகளிர் ஆணையத்தலைவர் குமரி தெரிவித்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக மகளிர் ஆணையத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தலைவர் குமரி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தலைவர் குமரி கூறியதாவது:-

பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளை எதிர்கொள்ள போலீஸ்துறை மூலம் விழிப்புணர்வு இயக்கம் ஏற்படுத்துதல் மற்றும் பெண்கள் பள்ளி கல்லூரிகள் மற்றும் வேலைக்காக வெளியில் செல்லும் போது வழியில் ஏற்படும் பிரச்சினைகளை கண்காணிக்கவும், மகளிருக்கான உதவி மையம் ஏற்படுத்தவும், நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு அவர்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ள சட்டங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளூர் புகார் குழு போன்ற குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பள்ளிக்கல்வித்துறையில் வெளியிடப்படும் மாணவர் உலகம் இதழில் மாணவ-மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்துவது மற்றும் பள்ளி பாதுகாப்பு குழுமத்தில் மாணவர்களையும் இடம் பெறச்செய்தல் போன்ற நடவடிக்கைகளை மாவட்ட கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவத்துறை சார்பாக இளம் வயது கருவுறுதல்களையும், சிசு கொலைகளையும் குறைக்க, தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகள் கட்டிட தொழிலாளர் தொழில்களில் ஈடுபடுவதை தடுக்க தொழிலாளர் நலத்துறைக்கு அத்தகைய தொழில்களில் ஈடுபடும் குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களை அங்கன்வாடி மையங்களில் சேர்த்து ஊட்டச்சத்து வழங்கவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தை குறைக்க கிராம சபை கூட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மகளிர் ஆணையத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 34 மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மீதமுள்ள ஒருசில மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் அறிவுறுத்தினார்.

இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, மாவட்ட சமூகநல அலுவலர் ஹிதாயத்துன் நூரியா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story