உயர்த்தப்பட்ட ஆவின் நெய், வெண்ணெய் விலையை உடனே குறைக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்


உயர்த்தப்பட்ட ஆவின் நெய், வெண்ணெய் விலையை உடனே குறைக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்
x

உயர்த்தப்பட்ட ஆவின் நெய், வெண்ணெய் விலையை உடனே குறைக்க வேண்டும் என்று தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை தி.மு.க. அரசு தற்போது மீண்டும் உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் ரூ.515 ஆக இருந்த ஒரு லிட்டர் சாதாரண நெய்யின் விலை ரூ.535 ஆக உயர்த்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜூலை மாதம் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி என்று சொல்லி ரூ.535-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ நெய்யின் விலையை ரூ.580 ஆக 2-வது முறை உயர்த்தியது. தற்போது 3-வது முறையாக ஒரு லிட்டர் சாதாரண நெய்யின் விலை ரூ.580-ல் இருந்து ரூ.630 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கடும் கண்டனம்

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபோது ரூ.515 ஆக இருந்த ஒரு கிலோ சாதாரண நெய்யின் விலை, தற்போது ரூ.630 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, நெய்யின் விலை சுமார் 23 சதவீதம் உயர்ந்துள்ளது. இது போதாது என்று, வெண்ணெயின் விலையையும் கிலோவுக்கு ரூ.20 உயர்த்தி மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது தி.மு.க. அரசு.

தொடர்ந்து மக்கள் மீது கூடுதல் நிதிச்சுமையை சுமத்திக்கொண்டேயிருக்கும் தி.மு.க. அரசின் மக்கள்விரோத செயல்பாட்டுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

உடனடியாக குறைக்க வேண்டும்

இந்த விலை உயர்வின் மூலம் ஏழை, எளிய மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், நெய், வெண்ணெய் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் தின்பண்டங்களின் விலையும் அதிகரிக்கும். மொத்தத்தில், பொதுமக்களை வாட்டி வதைக்கும் அரசாக தி.மு.க. அரசு விளங்கி வருகிறது.

மக்களை அரவணைத்து பேணிக்காக்கும் அரசனை உலகம் வணங்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு இணங்க, உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், மக்கள் படும் துன்பம் தி.மு.க. ஆட்சியை வீழ்த்திவிடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story