கழிவுநீர் கலக்கும் குமரலிங்கம் ராஜவாய்க்கால்
கழிவுநீர் கலக்கும் குமரலிங்கம் ராஜவாய்க்கால்
போடிப்பட்டி
குமரலிங்கம் ராஜவாய்க்காலில் பல இடங்களில் கழிவுகள் கலப்பதால் விவசாயிகள், மீன் பிடிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.
படித்துறைகள்
அமராவதி அணையிலிருந்து பழைய ராஜவாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் குமரலிங்கம், கொழுமம், மடத்துக்குளம், சோழமாதேவி உள்ளிட்ட பகுதி விவசாயிகளின் பாசன நீராதாரமாக உள்ளது. இந்தநிலையில் அமராவதி அணையிலிருந்து வெளியேறும் சுத்தமான நீர், வழி நெடுகிலும் உள்ள கிராமங்களில் கலக்கப்படும் கழிவுகள் மற்றும் கழிவு நீரால் பாழாகி வருவதாக இளைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் மற்றும் குமரலிங்கம் பகுதியில் ராஜவாய்க்காலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் கூறியதாவது:-
வயல் வேலைகளுக்குச் சென்று விட்டு வீடு திரும்பும் விவசாயிகள் கால்நடைகளுக்கு ராஜவாய்க்காலில் தண்ணீர் காட்டி விட்டு, கை நிறைய தண்ணீரை அள்ளி குடித்து தாகம் தீர்த்த காலம் ஒன்று உண்டு. இதற்காகவே ஆங்காங்கே படித்துறைகள் கட்டப்பட்டிருக்கும்.ஆனால் காலப்போக்கில் இந்த வாய்க்கால் படிப்படியாக மாசடையத் தொடங்கிய போது சில காலம் குளிப்பதற்கு மட்டும் ராஜாவாய்க்காலை பயன்படுத்தி வந்தனர்.
மீன்கள்
இப்போது அமராவதி தொடங்கி சோழமாதேவி வரை பல கிராமங்களின் கழிவு நீர் ராஜவாய்க்காலில் கலக்கப்படுகிறது. இதனால் பலருக்கு பயன்பட்ட பழைய ராஜவாய்க்கால் கிட்டத்தட்ட சாக்கடைக் கால்வாய் போல மாறி விட்டது. தற்போது உள்ள நிலையில் வாய்க்காலில் இறங்கினால் சாக்கடை போல கலங்கி விடுகிறது. ஆனாலும் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் ஏராளமான மீன்கள் உள்ளது. தண்ணீரின் அசுத்தத்தையும் தாக்குப் பிடித்து வளரக்கூடிய ஜிலேபி மீன்களே பெருமளவில் உள்ளது. அவற்றை வலை விரித்து பிடித்து உணவுக்காக பயன்படுத்துகிறோம். மீதமுள்ள மீன்களை விற்பனை செய்வதும் உண்டு. ராஜவாய்க்காலில் தொடர்ச்சியாக கழிவுகள் கலக்கப்பட்டால் நாளடைவில் மீன்கள் கூட வாழும் தன்மை இல்லாத நீராக மாறி விடும் அபாயம் உள்ளது.
மேலும் ராஜவாய்க்காலில் கலக்கப்படும் கழிவுகள் விவசாய நிலங்களை சென்றடைவதால் விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே ராஜவாய்க்காலில் கழிவுகள் கலப்பதைத் தடுத்து, சுகாதார சீர்கேடுகள் ஏற்படாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று அவர்கள் கூறினர்.கிட்டத்தட்ட சாக்கடைக் கால்வாய் போல மாறிவிட்ட ராஜவாய்க்காலில் வசிக்கும் மீன்களை சாப்பிட்டால் அதன் மூலம் நோய்த் தொற்றுகள் பரவுமா என்ற கேள்வியும் அச்சமும் ஒருசிலருக்கு உள்ளது.
---
3 காலம்
குமரலிங்கம் பகுதியில் ராஜவாய்க்காலில் வலை விரித்து மீன் பிடிக்கும் இளைஞரை படத்தில் காணலாம்.