ராஜகோபாலசாமி கோவில் பங்குனி பெருவிழா
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மன்னார்குடி:
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குனி பெருவிழா
மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது.இந்த தலம் பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் முக்கிய திருவிழாவான பங்குனி பெருவிழா 18 நாட்களும், அதனை தொடர்ந்து 12 நாட்கள் விடையாற்றி விழா என நடைபெற்று கிருஷ்ணா தீர்த்த தெப்ப உற்சவத்துடன் விழா நிறைவடையும்.
இந்த ஆண்டு பங்குனி பெருவிழா நேற்று துவஜாரோகணம் எனும் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக. பெருமாள் சன்னதிக்கு எதிரே உள்ள பெரிய கொடிமரத்தில் கருட பகவான் உருவம் பொறித்த கொடியை வேத மந்திரங்கள் முழங்க பட்டாசாரியார்கள் ஏற்றினர்.
வெண்ணெய்த்தாழி உற்சவம்
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ராஜகோபாலசாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 18 நாட்கள் நடைபெறும் பங்குனி பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தங்க சூரியபிரவை விழா வருகிற 20-ந் தேதியும்(திங்கட்கிழமை), தங்க கருடவாகனத்தில் இரட்டை குடை சேவை 22-ந் தேதியும்(புதன்கிழமை), வெண்ணெய்த்தாழி உற்சவம் 26-ந் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
வெண்ணெய்தாழி உற்சவத்தன்று காலை நவநீத சேவையில் ராஜகோபாலன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இரவில் தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார்.
தேரோட்டம்
27-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 12 நாள் விடையாற்றி விழாவும், அடுத்த மாதம் 9-ந் தேதி தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ, ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில்செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.