ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் ராஜகோபுர கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஓசூர்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் ராஜகோபுர கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராஜகோபுரம் கும்பாபிஷேகம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வர சாமி மலைக்கோவிலில் ஓசூர் டி.வி.எஸ். நிறுவனம் சார்பில் ரூ.7 கோடி செலவில் 112 உயரத்தில் புதிதாக 7 நிலை கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த 26-ந்தேதி மகா கணபதி ஹோமம், கோ பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணா ஹூதி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. 27-ந்தேதி விஷேச சாந்தி, 2-ம் கால பூஜை, திரவிய ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அன்று மாலை புதிய கலச ஸ்தாபனம், 3-ம் கால யாக பூஜை, திரவிய ஹோமம், நாடி சந்தானம் பூர்ணாஹூதி மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை, மலைக்கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வர குருக்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
ஹெலிகாப்டரில் பூ தூவினர்
அப்போது 2 கருடன்கள் கோபுரத்தை வட்டமிட்டு சுற்றிச்சுற்றி வந்ததை கண்டு, திரண்டிருந்த பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். மேலும், ஹெலிகாப்டர் மூலம் ராஜகோபுரம் மீது பூக்கள் தூவப்பட்டது. அப்போது பக்தர்கள் ஆரவாரம் செய்தனர்.விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக செங்கோல் ஆதினம் மற்றும் செல்லகுமார் எம்.பி., மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, உதவி கலெக்டர் சரண்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜி, தாசில்தார் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், டி.வி.எஸ். மோட்டார் தொழிற்சங்க தலைவர் ஆர்.குப்புசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ், ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், மண்டல தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், ரவி, தொழிலதிபர்கள் தேனி ராஜேந்திரன், பானு டூல்ஸ் சரவணன், பவானி சிங், பா.ஜ.க. தொழில்துறை பிரிவு மாநில செயலாளர் கே.ராமலிங்கம், பிராமணர் சங்க மாவட்ட தலைவர் சுதா நாகராஜன், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் எஸ்.நாராயணன் மற்றும் அசோகா, குபேரன் என்ற சங்கர், லட்சுமி ஹேமகுமார், டாக்டர் ஸ்ரீலட்சுமி நவீன், எம்.ஜி.சசிதேவ் உள்ளிட்ட கவுன்சிலர்களும், ம.தி.மு.க. நகர செயலாளர் ஈழம் குமரேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
அன்னதானம்
விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவையொட்டி ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.