ராஜாளிபட்டி அரசு பள்ளி மாணவிகள் தங்கம் வென்று சாதனை
ராஜாளிபட்டி அரசு பள்ளி மாணவிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
விராலிமலை:
விராலிமலை அருகே ராஜாளிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 216 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டி புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ராஜாளிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 22 கிலோ பிரிவில் 6-ம் வகுப்பு மாணவி அகல்யா, பிரவீனா, 26 கிலோ பிரிவில் ஜானகி, 35 கிலோ பிரிவில் 10-ம் வகுப்பு மாணவி பூமிகா, 46 கிலோ பிரிவில் மகாலட்சுமியும் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர். இவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதேபோல் இப்போட்டியில் 44 கிலோ பிரிவில் 10-ம் வகுப்பு மாணவி பிருந்தா, 55 கிலோ பிரிவில் கனிமொழி, 39 கிலோ பிரிவில் காளிமுத்தம்மாள், 48 கிலோ பிரிவில் சிவநேசன், 35 கிலோ பிரிவில் 8- ம் வகுப்பு மாணவன் அய்யப்பன், 7-ம் வகுப்பு மாணவி கோகிலா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றனர். 38 கிலோ பிரிவில் 9-ம் வகுப்பு மாணவி சசிரேகா, 8-ம் வகுப்பு மாணவி சாருமதி ஆகியோர் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றனர். சிறப்பிடம் பிடித்த மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் சாந்தாதேவி, உதவி தலைமையாசிரியர் தங்கவேல், பயிற்சியாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பாராட்டினர்.