கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடித்திருவாதிரை விழா
கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடித்திருவாதிரை விழா நடந்தது.
மீன்சுருட்டி:
ஆடித்திருவாதிரை விழா
அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை விழா நடைபெற்றது. விழாவை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, எம்.எல்.ஏ.க்கள் கா.சொ.க.கண்ணன், சின்னப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது;-
இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். அதன்படி இக்கோவிலில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் ஆடித் திருவாதிரை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மாமன்னர்களின் வரலாறு
இம்மண்ணின் வரலாற்றை உணர்த்துகின்ற நிகழ்வாக இவ்விழா நடைபெறுகிறது. உலகத்தின் பார்வை இம்மண்ணின் மேம்படும் வகையில் வரும் ஆண்டுகளில் ஆடித் திருவாதிரை விழா மிகவும் சிறப்பாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். நம் மண்ணை ஆண்ட மாமன்னர்களின் வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்கள் சோழர் காலத்தில் இருந்தே காரணத்துடன் அழைக்கப்பட்டு வருகிறது.
மாமன்னன் ராஜேந்திரசோழன் இக்கோவிலை ராஜங்க பரிபாலனை செய்த இடமாகவும் நிர்மாணித்துள்ளார். கோவிலின் எதிர்புறம் உள்ள இடத்தில் பொதுமக்கள் கூடும் இடமாகவும், கோவில் கருவறையின் மேல் உள்ள அமைப்பில் கருவூலங்களை பாதுகாக்கும் வகையிலும் அமைத்துள்ளார். இத்தகைய சிறப்புமிக்க மாமன்னர் குறித்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோவிலுக்கு வருகை தந்து, மாமன்னர் வரலாறு குறித்து அறிந்து கொள்ள வேண்டும். இப்பகுதி சமூக ஆர்வலர்களும் வரலாறு குறித்து எடுத்துக்கூற முன்வர வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும். உலக அளவில் சுற்றுலா பயணிகளை இதனால் ஈர்க்க முடியும்.
2 நாள் விழாவாக...
மாமன்னன் ராஜேந்திரசோழனின் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை கண்டறிந்து சிலை அமைக்கவும், அலங்கார வளைவு அமைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டில் ஆடித் திருவாதிரை அரசு விழாவை ஆன்றோர்கள், சான்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கு பெறும் வகையில் இருநாள் விழாவாக நடத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயார் செய்யப்பட்ட மாமன்னன் ராஜேந்திர சோழன் ஆட்சி சிறப்புகள், வரலாறு, படை பலம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் அடங்கிய சாதனை குறும்படத்தை அமைச்சர் வெளியிட்டார். மேலும் இந்திய காவல் பணி அதிகாரி சிவக்குமார் தயாரித்த மாமன்னன் ராஜேந்திரசோழன் தகவல்கள் அடங்கிய பாடல் குறுந்தகட்டினையும் அவர் வெளியிட்டார். விழாவில் பரத நாட்டியம், தப்பாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், கிராமிய நடனம், கட்டைக்கால் ஆட்டம், சிலம்பாட்டம், பள்ளி மாணவ, மாணவிகள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் காலை முதல் இரவு வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.