ரஜினி, கமல், விஜய் படங்களின் சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மரணம்


ரஜினி, கமல், விஜய் படங்களின் சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மரணம்
x

ரஜினி, கமல், விஜய் படங்களின் சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மரணம்.

சென்னை,

பிரபல சண்டை பயிற்சி இயக்குனர் ஜூடோ ரத்தினம் மரணம் அடைந்தார். இவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி சொந்த ஊரான குடியாத்தத்தில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93.

மரணம் அடைந்த ஜூடோ ரத்தினம் 1970 மற்றும் 80-களில் முன்னணி சண்டை பயிற்சியாளராக இருந்தார். ஆரம்பத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு டூப் நடிகராக இருந்து 1966-ல் ஜெய்சங்கரின் 'வல்லவன் ஒருவன்' படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குனர் ஆனார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் சண்டை காட்சிகளை அமைத்து கொடுத்து உள்ளார். ரஜினிகாந்த் நடித்த 46 படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக இருந்துள்ளார். காசேதான் கடவுளடா, முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், பாயும் புலி, மிஸ்டர் பாரத் உள்பட பல வெற்றி படங்களில் பணியாற்றி உள்ளார். ஆங்கில படத்திலும் பணியாற்றி உள்ளார்.

1,500 படங்களுக்கு மேல் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களுக்கும் சண்டை காட்சிகள் அமைத்து கொடுத்துள்ளார். கொஞ்சும் குமரி, தாமரைக்குளம், போக்கிரி ராஜா, தலைநகரம் ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார்.

அதிக படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியதால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தார். 2019-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றார்.

ஜூடோ ரத்தினத்தின் உடல் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்டண்ட் யூனியனில் இன்று அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மீண்டும் குடியாத்தம் கொண்டு செல்லப்பட்டு நாளை (சனிக்கிழமை) அங்கு இறுதி சடங்குகள் நடக்கின்றன.

ஜூடோ ரத்தினம் மறைவுக்கு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story