நாமக்கல்லில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்


நாமக்கல்லில்  உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்  கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்
x

நாமக்கல்லில் நேற்று உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.

நாமக்கல்

நாமக்கல்லில் நேற்று உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.

உறுதிமொழி ஏற்பு

ஒவ்வொரு ஆண்டும் குடும்ப நலத்துறை சார்பில் ஜூலை மாதம் 11-ந் தேதி உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு "குடும்ப கட்டுப்பாடு முறைகளை ஏற்போம் நம் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போம்" என்ற கருப்பொருளை மையமாக வைத்து, உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதன்படி உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு நேற்று நாமக்கல் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் உலக மக்கள் தொகை தினத்திற்கான உறுதிமொழியினை அனைத்து மருத்துவர்கள், பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

இதனைத் தொடர்ந்து உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதத்தினையும், கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலத்தையும் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி மணிக்கூண்டு, போலீஸ் நிலையம், டாக்டர் சங்கரன் சாலை வழியாக மீண்டும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை வந்தடைந்தது. 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

இதேபோல் நேற்று அனைத்து அரசு மருத்துவமனைகள், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மக்கள் தொகை தினத்திற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் மாவட்டம் மற்றும் வட்டார அளவில் மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், ஆணும் பெண்ணும் சமம், பெண் சிசு கொலையை தடுத்தல் மற்றும் பெண் கல்வியை ஊக்குவித்தல், இளம்வயது திருமணத்தை தடுத்தல், வளர் இளம் பெண்கள் ஆரோக்கியத்தில் அரசின் சிறப்பு திட்டங்கள் பற்றி காணொலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கருத்தடை அறுவை சிகிச்சை

மேலும் வருகிற 24-ந் தேதி வரை அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தகுதியுள்ள தம்பதியர்களுக்கு நிரந்தர கருத்தடை முறைகளான ஆண் கருத்தடை சிகிச்சை, பெண்களுக்கு குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தற்காலிக கருத்தடை முறைகளான சுருத்தடை வளையம் பொருத்துதல், கருத்தடை ஊசி போடுதல் மற்றும் கருத்தடை மாத்திரைகள் வழங்குதல் ஆகிய பணிகள் தமிழக அரசின் நெறிமுறைகளின் படி பாதுகாப்பாக செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குனர் (நலப்பணிகள்) ராஜமோகன், துணை இயக்குனர் (குடும்ப நலம்) வளர்மதி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் கோடீஸ்வரன், புள்ளியியல் உதவியாளர் மோகன்குமார் மற்றும் வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story