பாலக்கோட்டில் விழிப்புணர்வு ஊர்வலம்
பாலக்கோடு:
பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளியில் இந்த ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் முரளி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலமானது தக்காளி மண்டி, பைபாஸ் சாலை, எம்.ஜி.ரோடு, பஸ் நிலையம், கடைவீதி வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவிகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் ஆகியவை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். இதில் பாலக்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சித்ரா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார்.