ஓசூரில்ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம்போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
ஓசூர்:
ஓசூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
ஊர்வலம்
தமிழகத்தில் நேற்று 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
பாகலூர் அட்கோ பகுதியில் தொடங்கிய ஊர்வலம் பாகலூர் சாலை, பஸ் நிலைய சாலை, பழைய பெங்களூரு சாலை, எம்.ஜி.சாலை, ஏரித்தெரு, மற்றும் ராமநாயக்கன் ஏரி வழியாக சென்று கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் நிறைவு பெற்றது.
போலீஸ் பாதுகாப்பு
பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்துக்கு சிவண்ணா தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் சங்கர்லால் முன்னிலை வகித்தார். அகில பாரத துறவியர் சங்கத்தின் துணைத்தலைவர் ராமானந்தா சாமிகள் பேசினார். இதனை தொடர்ந்து வட தமிழக ஆர்.எஸ்.எஸ். மாநில இணை செயலாளர் பிஷோப குமார் பேசினார்.
இதில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ் எஸ். தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தையொட்டி ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.