தமிழகத்தில் நீர் மேலாண்மையை நிறைவேற்ற 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி நிதியை அரசு ஒதுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தமிழகத்தில் நீர் மேலாண்மையை நிறைவேற்ற 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் நேற்று பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் திருமண விழா நடந்தது. இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தர்மபுரி- மொரப்பூர் ெரயில்வே திட்டம் நிச்சயமாக நிறைவேறும். அதற்காக பொது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்று தென்னக ெரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.
ரூ.1 லட்சம் கோடி நிதி
தமிழகத்தில் நீர் மேலாண்மையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றில் இந்த ஆண்டு 450 டி.எம்.சி. (1 டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் உபரியாக சென்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்புவதற்கு 3 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தேவை. அதேபோல் தென்பெண்ணையாற்றில் ஆண்டுக்கு 5 முறை வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. எனவே தென்பெண்ணை, காவிரி உபரிநீர் திட்டங்களை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நீர் மேலாண்மையை நிறைவேற்ற 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். இதற்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆணைமடுவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
மதுக்கடைகளை மூடவில்லை
தி.மு.க.வினர் தங்களது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தனர். அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று 1½ ஆண்டுகள் கடந்தும், இதுவரை தேர்தல் வாக்குறுதியை சட்டமாக இயற்றவில்லை.
மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருவோம் என தெரிவித்தனர். ஆனால் 10 மதுக்கடைகளை கூட மூடவில்லை. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அடுத்த கல்வியாண்டிற்குள் தமிழக அரசு சட்டசபையில் சட்டமாக இயற்றும் என நம்புகிறோம்.
கூட்டணி ஆட்சி
வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். அதற்கேற்றவாறு வியூகங்களை 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது அமைப்போம். நாடாளுமன்ற தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பு எங்களது முடிவை அறிவிப்போம்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
ரஜினிகாந்த் சமுதாய பொறுப்புள்ளவர்
தொடர்ந்து பாபா திரைப்படம் டிஜிட்டல் வடிவில் மீண்டும் வெளிவர உள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மது மற்றும் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது குறித்து டாக்டர் அன்புமணி ராமதாசிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நடிகர் ரஜினிகாந்த் சமுதாய பொறுப்புள்ள, கடமை உணர்வு உள்ளவர். எது வேண்டும், எது தவிர்க்கப்பட வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும் என்று தெரிவித்தார்.