ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 பேர் ஒப்புதல்; ஒருவர் மறுப்பு


ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 பேர் ஒப்புதல்; ஒருவர் மறுப்பு
x

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 பேர் ஒப்புதல் அளித்துள்ளனர். ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருச்சி

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 பேர் ஒப்புதல் அளித்துள்ளனர். ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ராமஜெயம் கொலை

தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி மர்ம நபர்களால் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தமிழகம் முழுவதும் 1,500 பேரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையின் அடிப்படையில் சந்தேகப்படும் நபர்கள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுத்தனர். அது தொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதில் ஆட்சேபனை இருந்தால் அதை கோர்ட்டில் தெரிவிக்கலாம் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

கோர்ட்டில் ஆஜர்

அதன்படி சந்தேக நபர்களான சத்யராஜ், திலீப் என்கிற லெட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ் குமார், சிவா என்கிற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து, தென்கோவன் என்கிற சண்முகம், மோகன் ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 13 பேரும் கடந்த 1-ந்தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர். வழக்கு விசாரணையில் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் போலீஸ் சூப்பிரண்டு மனு தாக்கல் செய்ய முடியும் என கோரிக்கை வைத்த நிலையில் அந்த வழக்கை நவம்பர் 7-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் மனு தாக்கல் செய்தார்.

உண்மை கண்டறியும் சோதனை

இதையடுத்து வழக்கின் விசாரணை கடந்த 7-ந்தேதி விசாரிக்கப்பட்டது. அதில் ஆஜரான 13 பேரின் வழக்கறிஞர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை 14-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் உண்மை கண்டறியும் சோதனைக்கு சத்யராஜ், திலீப் என்கிற லெட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ் குமார், சிவா என்கிற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்பு ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர். இதில் தென்கோவன் என்கிற சண்முகம் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்க மறுப்பு தெரிவித்தார்.

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இந்த வழக்கில் மோகன் ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகியோர் ஆஜராகாத நிலையில் அவர்கள் வருகிற 17-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.


Next Story