மழை மாரியம்மன் கோவில் பூட்டப்பட்டது
மழை மாரியம்மன் கோவில் பூட்டப்பட்டது
மதுக்கூர் அருகே ஒரு பிரிவினர் மண்டகப்படி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் மழை மாரியம்மன் கோவிலை பூட்டி தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மழை மாரியம்மன் கோவில்
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே ஆலம்பள்ளம் கிராமத்தில் மழை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை இரு சமூகத்தினர் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த கோவிலில் கடந்த மாதம் குடமுழுக்கு நடந்தது.
அப்போது அதே ஊரில் வசிக்கும் ஒரு பிரிவினர் தங்களையும் அந்த கோவிலில் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், உதவி கலெக்டர் பிரபாகர் ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.
குடமுழுக்கு
இதுதொடர்பாக பட்டுக்கோட்டையில் உதவி கலெக்டர் பிரபாகர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து குடமுழுக்கு விழாவில் அந்த பிரிவினர் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அந்த பிரிவினர் தங்களுக்கு கோவிலில் தனி மண்டகப்படி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு மற்றொரு இரு சமூகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மண்டகப்படி நடத்த கோரிக்கை
இதனையடுத்து அவர்கள், தங்களுக்கு கோவிலில் தனி மண்டகப்படி வழங்க வேண்டும் என தாசில்தார் மற்றும் உதவி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கோவிலை பராமரித்து வரும் இரு சமூகத்தினரும் கலந்து கொள்ளாமல் பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர்.
கோவில் பூட்டப்பட்டது
இதை தொடாந்்து தாசில்தார் ராமச்சந்திரன் போலீஸ் பாதுகாப்புடன் ஆலம்பள்ளம் கிராமத்துக்கு சென்று மழை மாரியம்மன் கோவிலை பூட்டு போட்டு பூட்டினார்.
மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.