'தனித்தமிழ்நாடு கேட்போம்' என்ற ஆ.ராசா எம்.பி.யின் பேச்சு கண்டிக்கத்தக்கது-நாமக்கல்லில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி


தனித்தமிழ்நாடு கேட்போம் என்ற ஆ.ராசா எம்.பி.யின் பேச்சு கண்டிக்கத்தக்கது-நாமக்கல்லில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி
x

‘தனித்தமிழ்நாடு கேட்போம்’ என்ற ஆ.ராசா எம்.பி.யின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்று நாமக்கல்லில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி அளித்தார்.

நாமக்கல்

நாமக்கல்:

பா.ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல்லில் கடந்த 3-ந் தேதி தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது, தவறு செய்பவர்கள் மீதும், கட்டுப்பாட்டை மீறுவோர் மீதும் சர்வாதிகாரியாக மாறி கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். இந்தநிலையில் தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா பேசியபோது, மத்திய அரசின் இதே நிலைப்பாடு நீடித்தால் மீண்டும் பெரியார் கொள்கையை கையில் எடுத்து, தனித்தமிழ்நாடு கேட்போம் என்று பிரதமரையும், உள்துறை மந்திரியையும் எச்சரிக்கை செய்து பேசினார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

பெரியாரின் கொள்கையான கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்தோ, வலியுறுத்தியோ தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடத்த முடியாது. கட்சியும் நடத்த முடியாது. ஆன்மீக உணர்வுகளை மதிக்கும் தமிழகத்தில் கடவுள் மறுப்பு கொள்கையை தி.மு.க. வலியுறுத்தினால் அதை பா.ஜனதா எதிர்க்கும். கோவில் நிலத்தை மீட்டுள்ளோம் என்று கூறும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அது குறித்த விவரங்களை சட்டசபையில் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story