பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை


பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை
x

பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்று கலெக்டரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், திண்டுக்கல் மாநகராட்சி 43-வது வார்டு சவேரியார் பாளையத்தில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக கிடைப்பதில்லை.

மேலும் ரேஷன் கடையில் பொருட்கள் இருப்பு குறித்த விவர பட்டியல் வைக்கப்படுவதில்லை. இதனால் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் வார்டு பகுதியில் 24 மணி நேரமும் மதுவிற்பனை நடக்கிறது. இதனை தடுக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடிப்படை வசதி

இதேபோல் கொடைக்கானல் தாலுகா தாண்டிக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேஷ்பாபு கொடுத்த மனுவில், தாண்டிக்குடியில் போலீசார் மற்றும் அரசுத்துறை அலுவலர்களுக்கு குடியிருப்பு வசதி செய்ய வேண்டும். ஊராட்சி பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

பழனியை அடுத்த கரிக்காரன் புதூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் சங்கிலியப்பன் கொடுத்த மனுவில், எனது வலது காலில் பாதிப்பு ஏற்பட்டு சரிவர நடக்க முடியாமல் அவதிப்படுகிறேன். மேலும் கல்லூரிக்கு செல்லவும் சிரமமாக உள்ளது. எனவே எனக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

150 மனுக்கள்

நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 150 மனுக்கள் கலெக்டரிடம் கொடுக்கப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story