3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ராமநாதபுரம் அருகே நள்ளிரவில் காட்டு பகுதிக்குள் பதுக்கி வைத்திருந்த 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே நள்ளிரவில் காட்டு பகுதிக்குள் பதுக்கி வைத்திருந்த 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
பதுக்கல்
கடலாடி அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்த திட்டமிட்டு உள்ளதாக ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சப் -இன்ஸ்பெக்டர் அசோக், தலைமை காவலர்கள் முத்துகிருஷ்ணன், குமாரசாமி உள்ளிட்டோர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கடலாடி அருகே எஸ்.கீரந்தை பகுதியில் கருவேல மர காட்டுக்குள் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்று சோதனையிட்டபோது காட்டுகருவேல மரங்களுக்கு இடையில் இடத்தினை சுத்தம் செய்து மூடை மூடையாக ரேஷன் அரிசியை கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணை
அதனை கணக்கிட்டு பார்த்தபோது தலா 50 கிலோ எடை உள்ள 70 மூடைகளில் 3½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் கடலாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். போலீசார் வருவதை அறிந்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த ரேஷன் அரிசியை கடலாடி சுற்று வட்டார பகுதிகளில் சேகரித்து மினி சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து காட்டுப் பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர். இந்த ரேஷன் அரிசியை சேகரித்து நெல்லைக்கு கொண்டு சென்று அங்கு ஆலையில் கொடுத்து உடைத்து கேரளாவிற்கு கடத்தி சென்று கோழித்தீவனத்திற்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
பரபரப்பு
இதுதொடர்பாக போலீசார் எஸ்.கீரந்தை பகுதியை சேர்ந்த அழகர் மகன் குணபாலாஜி (வயது29) என்பவரை தேடிவருகின்றனர். கடலாடி அருகே காட்டுப்பகுதிக்குள் 3½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாலிபர் பிடிபட்டால்தான் இந்த ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து வாங்கினாரா அல்லது ரேஷன்கடையில் இருந்து வாங்கினாரா என்பது தெரியவரும் என்பதால் அவரை தேடி வருகின்றனர்.