நல்லம்பள்ளி அருகே வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசி பதுக்கல்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தம்மணம்பட்டி கிராமத்தில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயகுமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் நல்லம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் உமாராணி, வருவாய் ஆய்வாளர் சிங்காரவேலம் மற்றும் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் தம்மணம்பட்டியில் சோதனையில் ஈடுபட்டனர்.
1 டன் பறிமுதல்
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் 21 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதனை பிரித்து பார்த்தப்போது ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, உங்காரனஅள்ளியை சேர்ந்த வெங்கடாஜலம் (வயது 45) என்பவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்ததும், அதை வெளியூரில் விற்பனை செய்ய கடத்த முயன்றதும் தெரிந்தது.
இதையடுத்து குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, தர்மபுரியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கிய வெங்கடாஜலம் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.