ஆம்னி வேனில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அஞ்செட்டி அருகே ஆம்னி வேனில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தேன்கனிக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, மூர்த்தி மற்றும் போலீசார் நேற்று காலை அஞ்செட்டி அருகே உஸ்தலப்பள்ளி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக அருகே வந்த ஆம்னி வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், 50 கிலோ அளவிலான 20 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது.
இதுதொடர்பாக ஆம்னி வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உடுபரணியை சேர்ந்த பசலிங்கப்பா (வயது 60) என்பதும், மாநிலத்திற்கு ரேஷன் அரிசியை கடத்தியதும் தெரிய வந்தது. மேலும் இவர் அஞ்செட்டி, உஸ்தலப்பள்ளி, பாண்டுரங்கன்தொட்டி, எருமத்தப்பள்ளி பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கர்நாடகாவில் விற்று வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஆம்னி வேன் மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.