கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்-3 பேர் கைது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 4½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி, நேரு, கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு மேலுமலை அருகில் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மற்றும் காரை மடக்கி சோதனை செய்தனர். அவற்றில் 50 கிலோ அளவிலான 90 மூட்டைகளில், 4½ டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. விசாரணையில், அந்த வாகனங்களில் வந்தவர்கள் கிருஷ்ணகிரி, சுண்டேக்குப்பம், பில்லனக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்க முயன்றது தெரிந்தது.
3 பேர் கைது
இதையடுத்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த பில்லனக்குப்பத்தை சேர்ந்த அண்ணாதுரை (வயது 32), காரில் வந்த கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு விநாயகர் தெருவை சேர்ந்த விக்ரம்குமார் (26), சுண்டேக்குப்பம் ராஜா (49) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் 4½ டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனம், கார் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.