ரேஷன் அரிசி கடத்தல்; 3 வாலிபர்கள் கைது


ரேஷன் அரிசி கடத்தல்; 3 வாலிபர்கள் கைது
x

கும்பகோணத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

கும்பகோணத்தை அடுத்த எலுமிச்சங்காபாளையம் பொன்னியம்மன் கோவில் தெருவில் லிங்கதுரை என்பவரின் குடோனில் ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளை கடத்தி கொண்டு வந்து பதுக்கி வைத்து மாவாக அரைத்து பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் நேற்று முன் தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணி தலைமையிலான போலீசார் அந்த குடோனுக்கு சோதனையிட சென்றனர்.

3 பேர் கைது

அப்போது மூப்பக்கோவில் அப்துல்கலாம் நகரை சேர்ந்த பாஸ்கர் மகன் அஜித்குமார் (வயது24), செந்தில் மகன் அருள் (19), ஏரகரம் வழி நடப்பு கீழத்தெருவை சேர்ந்த முருகேசன் மகன் ஆசைக்குமார் (20) ஆகிய 3 பேர் ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக சரக்கு வாகனத்தில் இருந்து குடோனில் இறக்கி வைத்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கையும், களவுமாக பிடித்தனர்.இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்து நேற்று மாலை தஞ்சை கிளைச்சிறையில் அடைத்தனர்.

பறிமுதல்

மேலும், அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து, அதில் இருந்த ரேஷன் அரிசி 1100 கிலோவும், குருணை 12,500 கிலோவும் பறிமுதல் செய்து கும்பகோணத்தில் உள்ள சேமிப்பு குடோனில் ஒப்படைத்தனர்.ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்த தனியார் குடோனுக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரை செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குடோனை நடத்தி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story