டிப்பர் லாரி மீது, ரேஷன் அரிசி கடத்தல் லாரி மோதி விபத்து


டிப்பர் லாரி மீது, ரேஷன் அரிசி கடத்தல் லாரி மோதி விபத்து
x

குடியாத்தம் அருகே டிப்பர்லாரி மீது ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர்கள் இருவரும் காயமடைந்தனர்.

வேலூர்

குடியாத்தம் அருகே டிப்பர்லாரி மீது ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர்கள் இருவரும் காயமடைந்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல் லாரி மோதல்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி தாங்கல் கிராமத்தில் இருந்து அதிகாலையில் குடியாத்தம் ெரயில் நிலையம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஜல்லி நிரப்பும் பணிக்காக, லஜல்லி கற்கள் ஏற்றிய டிப்பர் லாரி ஒன்று குடியாத்தம் அடுத்த வேப்பூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே அதிவேகமாக வந்த ஒரு லாரி டிப்பர் லாரி மீது மோதி திரும்பி நின்றது.

இதில் இரண்டு லாரிகளின் டிரைவர்களும் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரோந்து போலீசார் அங்கு வந்தனர். அதற்குள் வேகமாக வந்து மோதிய லாரியில் இருந்த டிரைவர் காயங்களுடன் தப்பி ஓடிட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த லாரியை சோதனையிட்டபோது அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

டிரைவர்கள் காயம்

இதனால் லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லும்போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. காயம் அடைந்த டிப்பர் லாரி டிரைவர் மரியதாஸ் குடியாத்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

ரேஷன் அரிசி கடத்தல் லாரி விபத்து ஏற்படுத்திய சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கடராமன் சம்பவ இடத்திற்கு விரைந்து அரிசி முட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, வேலூர் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரும் வந்து விசாரணை நடத்தினர்.

4 டன் அரிசி பறிமுதல்

பின்னர் லாரியில் இருந்த 4 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை குடியாத்தத்தை அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். விபத்து தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் மற்றும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தமிழகத்தின் வழியாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். அதனை தொடர்ந்து குடியாத்தம் அருகே உள்ள சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தொடர்ந்து நடைபெறும் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களுக்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story