வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது -தமிழக அரசு எச்சரிக்கை


வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது -தமிழக அரசு எச்சரிக்கை
x

கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

பொது வினியோகத்துறையில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களின் பணி முக்கியமான ஒன்று.

3 நாள் வேலைநிறுத்தம்

மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பொது வினியோக திட்டத்துக்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும்,

5 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியையும் சேர்த்து, அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 7-ந் தேதி (நேற்று) முதல் 3 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. ஆனால் இந்த போராட்டம் சென்னையில் மட்டும் நடைபெறவில்லை.

கடைகள் அடைப்பு

மற்றபடி, இதர மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் பொருட்கள் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டன. அதேவேளை அத்தியாவசிய பொருட்களை மாற்று பணியாளர்களை வைத்து பொதுமக்களுக்கு வினியோகிக்க நடவடிக்கைகள் அரசால் கையாளப்பட்டு வருகின்றன.

திருவள்ளூர்

திருவள்ளூரில் ரேஷன் ஊழியர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்க தலைவர் ஜி.ஜெயச்சந்திரராஜா, சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூறியதாவது:-

கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும்

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி உள்ளது. சென்னையில் அதிகாரிகள் தரும் நெருக்கடி காரணமாக ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. சென்னை தவிர இதர மாவட்டங்களில் ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அந்த வகையில் தமிழகத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. முதல் நாளான நேற்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. 2-ம் நாளில் (இன்று) கோட்ட அளவிலும், 3-ம் நாளில் (நாளை) வட்ட அளவிலும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன. வருகிற 10-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காத்திருப்பு போராட்டத்தையும் நடத்துகிறோம்.

இது எங்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் அரசு ஏற்கனவே நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி தந்தவைதான். ஆனாலும் எங்களை அரசு மன உளைச்சலுக்கு ஆளாக்கியே வருகிறது. எனவே அரசு சார்பில் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தமிழக அரசு உத்தரவு

இதற்கிடையே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் தங்களின் 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தை நடத்த இருப்பதாக அந்த சங்கத்தின் மாநில தலைவர் அறிவித்துள்ளார்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து மண்டலங்களில் பணியாற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. எனவே சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையிலும், பொது வினியோக திட்டப்பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் தக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பளம் பிடித்தம்

போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கப்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு, "வேலை செய்யவில்லை, சம்பளமும் இல்லை" என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story