நீலகிரி, தர்மபுரியில் ரேஷன் கடைகளில் இன்று முதல் கேழ்வரகு வினியோகம்-கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
ஊட்டி
நீலகிரி, தர்மபுரியில் இன்று முதல் ரேஷன் கடைகளில் 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ரேஷன் கடையில் ஆய்வு
நீலகிரி மாவட்டம் ஊட்டி பாலகொலா மீக்கேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரி மற்றும் தர்மபுரியில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று (புதன்கிழமை) முதல் 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படும். நீலகிரியில் இந்த திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 29 ஆயிரம் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.
அனுமதி கேட்கப்படும்
இதற்காக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்திற்கு 1,350 மெட்ரிக் டன் கேழ்வரகு இந்திய உணவு கழகத்தின் மூலம் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த தேவைப்படும் கூடுதல் கேழ்வரகை கர்நாடகா மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கலெக்டர் அம்ரித், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகானந்தம், உணவு வழங்கல் அலுவலர் லோகநாதன் உடனிருந்தனர்.
விற்பனை இலக்கு
இதைத்தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ரோட்டில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். அங்குள்ள உருளைக்கிழங்கு ஏல விற்பனை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உருளைக்கிழங்குகளை தரம் பிரித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களோடு ஒன்றாக அமர்ந்து உருளைக்கிழங்குகளை தரம் பிரித்தார். மேலும் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அதன் பின்னர் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் கடந்த 2018, 2019-ம் ஆண்டு உருளைக்கிழங்கு விற்பனை ரூ.69 கோடி இலக்கை எட்டியது. 2022-2023-ம் ஆண்டு ரூ.100 கோடிக்கு விற்பனையானது. மேலும் 2023-2024-ம் ஆண்டு ரூ.110 கோடியில் இருந்து ரூ.125 கோடி விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு கடனுதவி
கூட்டுறவு சங்கங்களில் ரூ.70,000 கோடிக்கு மேல் வைப்பு நிதி உள்ளது. 2.23 கோடி ரேஷன் அட்டைதாரர்களில், 1.7 கோடி அட்டைதாரர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் ரூ.13,472 கோடி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தை மேம்படுத்துவதற்காக ரூ.ஒரு கோடி வரை நிதி வழங்கப்பட உள்ளது.
விவசாயிகள் பயிரிடும் கேழ்வரகை கூட்டுறவு சங்கம் கொள்முதல் செய்து, அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். மேலும் பகுதி நேர ரேஷன் கடைகளை மக்கள் தொகைக்கு ஏற்ப முழு நேர கடையாக மாற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
உர பிரிவு
முன்னதாக மேட்டுப்பாளையம் கெண்டை ஊரில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க உர பிரிவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோவை மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன், டியூகாஸ் மேலாண்மை இயக்குனர் சிவகுமார், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் தமிழ்ச்செல்வன், செயலாளர் தியாகு, கோவை மாவட்ட ஒன்றிய மேலாண்மை இயக்குனர் முத்துக்குமார், கிளை மேலாளர் மகாலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.