பெண் மீது திராவகம் வீச்சு;மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் வெறிச்செயல்


பெண் மீது திராவகம் வீச்சு;மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் அருகே பெண் மீது திராவகம் வீசி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குலசேகரம் அருகே பெண் மீது திராவகம் வீசி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

இரவில் நடந்து சென்ற பெண்

குலசேகரம் அருகே மாடத்தார் கோணத்தை சேர்ந்தவர் லதா (வயது 46). இவருடைய மகன் சுபாஷ் (26), ராணுவ வீரராக உள்ளார். கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த லதா சித்திரங்கோட்டில் மாவு மில் நடத்தி வருகிறார்.

இவர் தினமும் காலையில் மில்லுக்கு பஸ்சில் சென்று விட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம். அதன்படி நேற்று இரவு 8 மணிக்கு பஸ்சில் மாடத்தார்கோணம் விலக்கு பகுதியில் இறங்கி வீடு நோக்கி நடந்து சென்றார்.

திராவகம் வீச்சு

பிரதான சாலையில் இருந்து தெருவில் உள்ள சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் திடீரென ஒரு பாட்டிலை அவர் மீது வீசி விட்டு தப்பினர்.

அந்த பாட்டிலில் திராவகம் இருந்துள்ளது. அது லதாவின் மீது பட்டதும் அவர் அலறி துடித்தார். உடனே சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரபரப்பு

திராவகம் வீசியதில் லதாவின் முகம், கை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகள் வெந்து போனது. இதுபற்றி தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் திராவகம் வீசிய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் லதாவின் மீது திராவகம் வீசிய நபர்கள் யார்? எதற்காக வீசினார்கள்? என்பது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்மஆசாமிகளால் பெண் மீது திராவகம் வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story