இழப்பீட்டு தொகை வழங்குவதில் காலதாமதம்: கோட்டாட்சியரின் ஜீப்பை ஜப்தி
இழப்பீட்டு தொகை வழங்குவதில் காலதாமதமானதால் கோட்டாட்சியரின் ஜீப்பை ஜப்தி செய்ய கும்பகோணம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இழப்பீட்டு தொகை வழங்குவதில் காலதாமதமானதால் கோட்டாட்சியரின் ஜீப்பை ஜப்தி செய்ய கும்பகோணம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புறவழிச்சாலை பணி
கும்பகோணம் பெரிய தம்பி நகரை சேர்ந்தவர் கருப்புசாமி மகன் சாமிநாதன். இவருக்கு சொந்தமான 2 ஆயிரத்து 500 சதுர அடி இடத்தை செட்டிமண்டபம் புறவழிச்சாலை பணிகளுக்காக கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசு கையகப்படுத்தியது. நிலம் கையகப்படுத்தியதற்காக சாமிநாதனுக்கு சதுர அடி ரூ.42 என்றும், மற்றவர்களுக்கு ரூ.168 என்றும் இழப்பீட்டு தொகை நிர்ணயம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாமிநாதன் தனக்கு இழப்பீடு தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கடந்த 2011-ம் ஆண்டு கும்பகோணம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு சாமிநாதனுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இந்த இழப்பீட்டுத் தொகை உரிய காலத்தில் வழங்காத காரணத்தினால் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் சாமிநாதன் வழக்கு தொடர்ந்தார்.
ஜப்தி செய்ய உத்தரவு
வழக்கு விசாரணையின் போது 2022-ம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதிக்குள் இழப்பீட்டு தொகையை வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக சாமிநாதன், கும்பகோணம் கோர்ட்டில் முறையிட்டார். இதுகுறித்து விசாரித்த கும்பகோணம் கோர்ட்டு முதன்மை சார்பு நீதிபதி வெங்கடேசபெருமாள் குறிப்பிட்ட நாளுக்குள் இழப்பீட்டு தொகை வழங்காத காரணத்தினால் கும்பகோணம் கோட்டாட்சியரின் ஜீப்பை ஜப்தி செய்து உத்தரவிட்டார். அதன்படி ஜீப் ஜப்தி செய்யப்பட்டது.