விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேர்தல்


விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேர்தல்
x

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. நாளை விருப்ப மனு தாக்கல் முடிகிறது.

சென்னை,

தி.மு.க.வில் 5 ஆண்டுக்கு ஒருமுறை உள்கட்சி தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி கிளைக் கழகம் முதல் பேரூர், நகரம், ஒன்றியம், மாநகரம், வட்டம், பகுதி என பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

தி.மு.க. மாவட்டச் செயலாளர் பதவிக்கான விருப்ப மனு தாக்கல் நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. முதல் நாளில், கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, நெல்லை கிழக்கு, நெல்லை மத்தி, தென்காசி தெற்கு, வடக்கு, விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, தேனி வடக்கு, தெற்கு, மதுரை வடக்கு, தெற்கு மற்றும் மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்களுக்கான செயலாளர் பதவிக்கு விருப்புமனுக்கள் பெறப்பட்டன.

தென்காசி-மதுரையில் போட்டி

இதில், பெரும்பாலான மாவட்டங்களுக்கு மாவட்டத்தின் அமைச்சர்களே விருப்ப மனுக்கள் வழங்கினர். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இங்கு 4 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். அதேபோல், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு 2 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு 3 பேர் விருப்பமனு கொடுத்து இருக்கிறார்கள்.

21 மாவட்டங்களில் விருப்ப மனு

நேற்று 21 மாவட்டங்களில், மாவட்ட செயலாளர்களுக்கான விருப்பமனு தாக்கல் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.

அதன்படி, நீலகிரி, ஈரோடு வடக்கு, தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை மாநகர், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தி, கரூர். திருச்சி தெற்கு, மத்தி, திருச்சி வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கான செயலாளர்கள் பதவிக்கு விருப்ப மனு பெறப்பட்டது.

செந்தில்பாலாஜி

இதில், அந்தந்த மாவட்டத்தின் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர் பதவிக்கு விருப்ப மனு கொடுத்தனர். கரூர் மாவட்டத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, தர்மபுரி மேற்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தி்ற்கு ராஜேஷ் எம்.பி. ஆகியோர் விருப்பமனு கொடுத்தனர்.

மனுக்களை தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, தலைமை நிலைய செயலாளர்கள் பெற்றனர். அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நாளை மனுதாக்கல் முடிகிறது

இன்று (சனிக்கிழமை) புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை வடக்கு (மயிலாடுதுறை), நாகை தெற்கு, தஞ்சை மத்தி, வடக்கு, தெற்கு, கடலூர் கிழக்கு, மேற்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்தி ஆகிய 16 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களுக்கான விருப்ப மனு பெறப்படுகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) விருப்பமனு தாக்கல் முடிகிறது. இதனால் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது.


Next Story