மண்எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்த மாணவியின் குடும்பத்துக்கு புதிய வீடு


மண்எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்த  மாணவியின் குடும்பத்துக்கு புதிய வீடு
x
தினத்தந்தி 19 Sept 2023 12:30 AM IST (Updated: 19 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் மண்எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்த மாணவியின் குடும்பத்துக்கு புதிய வீட்டை கலெக்டர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளத்தில் மண்எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்த மாணவியின் குடும்பத்துக்கு புதிய வீட்டை கலெக்டர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார்.

விளக்கு வெளிச்சத்தில் பாடம் படித்தனர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தட்டார்ரஸ்தா தெருவைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம்-லட்சுமி. இவர்களுக்கு பேச்சித்தாய் என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது ஓட்டு வீட்டிற்கு மின் வசதி இல்லாமல் இருந்ததால் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 படித்த பேச்சித்தாய், அவரது தம்பியும் மண்எண்ணெய்விளக்கு வெளிச்சத்தில் பாடம் படித்தது சமூகவலைதளங்களில் பரவியது.

இந்த சம்பவம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கவனத்துக்கு வந்தது. அவரது உத்தரவின்பேரில் மாணவியின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் வீட்டை வந்து பார்வையிட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் வீடு கட்ட நிதி தரவேண்டும் என மாணவி பேச்சித்தாய் மற்றும் தாயார் லட்சுமி கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று கலெக்டர் தனது விருப்ப நிதியில் இருந்து ரூ.2.10 லட்சம் நிதி வழங்கினார்.

வீடு திறப்பு

அதன்பின் பேரூராட்சி சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி வீட்டை திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அப்பகுதி மக்கள் கோரிக்கை தொடர்பான மனுக்கள் அளித்தனர். மனுவை பெற்ற அவர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ், சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செந்தூர்ராஜன், சாத்தான்குளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசானமுத்து. பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story