நத்தத்தில் ரெடிமேடு ஜவுளி பூங்கா அமையுமா?
நத்தத்தில் ரெடிமேடு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் என்று நம் முன்னோர்கள் கூறினர். நாம் உடுத்தும் ஆடையே பிறரிடம் நம்மை பற்றிய மதிப்பை ஏற்படுத்தும். எனவே ஆடை அணிவதில் அனைவரும் கவனம் செலுத்துகிறோம்.
ஆடைகள்
ஆதிவாசியாக திரிந்த மனிதனுக்கு நாணம் வந்ததும், உடலை மறைக்க விரும்பினான். அப்போதே நாகரிகம் பிறந்தது. ஆரம்பத்தில் மனிதன் தன் உடலை மறைக்க இலைகள், விலங்குகளின் தோல்களை ஆடையாக அணிந்தான். பின்னர் நாகரிக வளர்ச்சியால் துணியை நெய்து, ஆடையாக அணிய தொடங்கினான்.
துணியால் ஆடை அணிய தொடங்கியதும் மனிதனின் நாகரிகம் புதிய பரிமாணத்தை எட்டியது. விதவிதமான வடிவங்களில் பலவகை வண்ணங்களில் ஆடைகளை அணிய தொடங்கினர். இதற்காக துணியை வாங்கி தையல் தொழிலாளியிடம் கொடுத்து புதுவித டிசைன்களில் தைத்து தரச்சொல்லி அணிந்து மகிழ்ந்தனர்.
ரெடிமேடு ஆடைகள்
இளைஞர்கள், இளம்பெண்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் தையல் தொழிலாளிகளும், புதிய வடிவங்களில் ஆடைகளை தைத்துக் கொடுத்தனர். யாரிடம் தைத்த ஆடை என்று கேட்கும் அளவுக்கு ஒருசில தையல் தொழிலாளிகள் திறமையை வௌிப்படுத்தினர். மேலும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்களில் ஆடைகளை தைப்பதற்கு தையல் கடைகளில் துணிகள் குவிந்து விடும்.
ஒரு சிலருக்கு, தையல் கடைகளில் அதிகாலை வரை காத்திருந்து ஆடைகளை வாங்கி சென்ற அனுபவம் இருக்கும். அவ்வாறு ஆடைகளை தைத்து அணியும் பழக்கம் மாறி ரெடிமேடு ஆடை காலம் தலை தூக்கியது. சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் புது, புது வடிவங்களில் ரெடிமேடு ஆடைகள் வரத் தொடங்கி விட்டன.
நத்தம்
இதனால் பண்டிகை, திருவிழா காலங்களில் தையல் கடையில் மணிக்கணக்கில் காத்திருந்த காலம் மாறிவிட்டது. பண்டிகைக்கு முந்தைய நாள் ஜவுளி கடைக்கு சென்று விரும்பிய வண்ணத்தில் ரெடிமேடு ஆடைகளை வாங்கும் அளவுக்கு நாகரிகம் வளர்ந்து விட்டது. அந்த வகையில், தமிழகத்தில் ரெடிமேடு ஆடைகள் அதிகமாக உற்பத்தியாகும் இடம் எதுவென்றால் அனைவரும் சட்டென திருப்பூர் என்று கூறி விடுவோம்.
அதேநேரம் திருப்பூரை போன்று பிற பகுதிகளிலும் ரெடிமேடு ஆடைகள் தயாராகின்றன. அதில் திண்டுக்கல் மாவட்டம் நத்தமும் ஒன்றாகும். தமிழகத்தில் ரெடிமேடு ஆடைகள் உற்பத்தியில் நத்தம் கணிசமான பங்களிப்பை அளித்து வருகிறது. நத்தம் பகுதியில் ஆண்களுக்கான ரெடிமேடு சட்டைகள் அதிக அளவில் தயாராகின்றன.
குட்டி ஜப்பான்
நத்தத்தில் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் ரெடிமேடு சட்டைகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. பலர் குடிசைத் தொழிலாக வீடுகளிலும், சிறிய கடைகளிலும் ரெடிமேடு சட்டைகளை உற்பத்தி செய்கின்றனர். நத்தத்தில் தயாராகும் ரெடிமேடு சட்டைகள் மதுரை, சென்னை, திருச்சி, உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
நத்தத்தில் தயாராகும் ரெடிமேடு சட்டைகளின் தரம் நன்றாக இருப்பதால், தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும் விரும்பி வாங்குகின்றனர். எனவே அந்த பகுதிகளுக்கும் ரெடிமேடு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நல்ல வருமானம் கிடைப்பதால், நத்தத்தை குட்டி ஜப்பான் என்றே அழைக்கின்றனர்.
ஏற்றுமதி
அதேநேரம் பெரிய நிறுவனங்களில் தயாராகும் ரெடிமேடு சட்டைகளை எளிதில் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து விடுகின்றனர். வெளியூர் வியாபாரிகளும் பெரிய நிறுவனங்களை எளிதில் தொடர்பு கொள்ள முடிவதால், அவர்களிடம் வாங்கி செல்கின்றனர். ஆனால் சிறு நிறுவனங்களுக்கு அவ்வாறு வெளியூர் வியாபாரிகளை சந்திக்கும் வாய்ப்பு எளிதாக கிடைப்பதில்லை.
இதனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளர்ச்சி பெற முடியாமல் சிறு நிறுவனங்கள் உள்ளன. இதேபோல் பெரிய நிறுவனங்கள் அதிக அளவில் மொத்தமாக துணிகளை வாங்குவதால், குறைந்த விலையில் சட்டைகளை தயாரித்து கொடுக்க முடிகிறது. ஆனால் சிறு நிறுவனங்கள் குறைந்த அளவில் துணிகளை வாங்குவதால், மிகக்குறைந்த லாபத்தில் விற்கும் நிலை உள்ளது.
ரெடிமேடு ஜவுளி பூங்கா
எனவே ரெடிமேடு சட்டைகள் மற்றும் துணி வியாபாரிகளை ஒருங்கிணைத்து நத்தத்தில் ரெடிமேடு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதன்மூலம் சிறு நிறுவனங்களில் தயாராகும் ரெடிமேடு ஆடைகளை வெளியூர் வியாபாரிகள் எளிதில் வாங்கி செல்ல உதவியாக இருக்கும்.
இதனால் சிறு நிறுவனங்கள் வளர்ச்சி அடைவதோடு, புதிதாக பல நிறுவனங்கள் உருவாகும். அதன்மூலம் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்பது நத்தம் மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதுகுறித்து நத்தத்தில் ரெடிமேடு ஆடை தயாரிப்பில் ஈடுபடுபவர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
தொழில் வளர்ச்சி ஏற்படும்
ரெடிமேடு ஆடை உற்பத்தியாளர் லோகநாதன்:-
நத்தத்தில் தயாராகும் ரெடிமேடு சட்டைகள் பல ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழிலில் நத்தம் உள்பட பிற பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ரெடிமேடு சட்டைகளை தயார் செய்வதற்காக துணிகளை வெளியூர்களுக்கு சென்று வாங்கும் நிலை உள்ளது. இதேபோல் ரெடிமேடு சட்டைகளை வெளியூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதில் சிறு நிறுவனங்களுக்கு சிரமம் இருக்கிறது. எனவே நத்தத்தில் ஒருங்கிணைந்த ரெடிமேடு ஜவுளி பூங்கா அமைத்தால் ரெடிமேடு ஆடை தொழில் வளர்ச்சி பெறும். மேலும் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ரெடிமேட் ஆடை உற்பத்தியாளர் முகமது சையது அபுதாகிர்:- ரெடிமேடு ஆடை உற்பத்தி தொழிலில் பலர் ஈடுபட்டு உள்ளனர். அதன்மூலம் பலருக்கு வேலை கிடைத்து வருகிறது. நத்தத்தில் இருந்து வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் ஆடைகளை சந்தைப்படுத்தி விற்பனை செய்வதில் பல நிறுவனங்களுக்கு பின்னடைவு இருக்கிறது. இதை தவிர்த்து ஒருங்கிணைந்த வளர்ச்சி பெறுவதற்கு ரெடிமேடு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.