உண்மையான எதிர்க்கட்சியாக தே.மு.தி.க. தான் செயல்படுகிறது- பிரேமலதா விஜயகாந்த் சொல்கிறார்
தமிழகத்தில் நடந்த அனைத்து பிரச்சினைக்கும் முதல் குரலாக தே.மு.தி.க கொடுத்தது. மக்களுக்காக எங்களுடைய குரலை தைரியமாக கொடுத்திருக்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார்.
சென்னை
சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தே.மு.தி.க. தலைமைக் கழகத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. உட்கட்சித் தேர்தலை இன்னும் ஒருமாத காலத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்த இருக்கிறது. அந்த உட்கட்சித் தேர்தலை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அனைத்து நிர்வாகிகளுக்கும் ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜயகாந்த் 70வது பிறந்தநாள் அன்று தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையாக எழுச்சியோடு கொண்டாட உள்ளோம் செப்டம்பர் 14 கட்சியினுடைய 18 ஆம் ஆண்டு விழா ஆகிய மூன்று விழாக்களையும் எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்த கூட்டம் நடைபெற்றது.
எங்களுடைய கட்சியை அடுத்தகட்டத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான ஆலோசனையாக இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. 5 வருடத்துக்கு ஒருமுறைதான் எங்கள் கட்சியில் உட்கட்சி தேர்தல் நடப்பது வழக்கம். விஜயகாந்த் நலமாக உள்ளார். அவர் மாதம்தோறும் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு செல்லுவது வழக்கம்.
தே.மு.தி.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திக்காததாலேயே அ.தி.மு.க. ஆட்சியை இழந்தது. இப்பொழுது அதைப் பற்றி அவர்கள் வருந்துகிறார்கள். நாங்களே சொன்னதை அவர்கள் சரியான நேரத்தில் செய்திருந்தால் இன்று அவர்கள் ஆட்சியில் இருந்து இருப்பார்கள்.
தமிழகத்தில் நடந்த அனைத்து பிரச்சினைக்கும் முதல் குரலாக தே.மு.தி.க கொடுத்தது. மக்களுக்காக எங்களுடைய குரலை தைரியமாக கொடுத்திருக்கிறோம்.
உண்மையான எதிர்க்கட்சியாக தே.மு.தி.க. தான் செயல்படுகிறது . விஜய பிரபாகரனுக்கு கட்சி பொறுப்பு வழங்குவது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முடிவு எடுப்பார்.
ஆன்மிகவாதி அரசியல் பேசக்கூடாது. அரசியல் வாதி ஆன்மிகம் பேசக்கூடாது. அவரவர் வேலைகளை செய்தாலே சர்ச்சை இருக்காது என கூறினார்.