இளையராஜாவின் தனித்திறமையால் கிடைத்திருக்கும் அங்கீகாரம்: அதில் அரசியல் பார்க்காதீர்கள் - அண்ணாமலை


இளையராஜாவின் தனித்திறமையால் கிடைத்திருக்கும் அங்கீகாரம்: அதில் அரசியல் பார்க்காதீர்கள் - அண்ணாமலை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 7 July 2022 11:45 AM IST (Updated: 7 July 2022 11:46 AM IST)
t-max-icont-min-icon

இளையராஜாவுக்கு எம்.பி.யாக நியமிக்கப்பட்டதில் அரசியல் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா, பி.டி.உஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் பிரதமர் மோடி குறித்த புத்தகத்தில் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒற்றுமைப்படுத்தி இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை பல்வேறு விமர்சனங்களை பெற்றிருந்தது. பல்வேறு தரப்பிலிருந்து இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் குவிந்தன.

இந்நிலையில் இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்தாகவே பார்க்க வேண்டும் என்றும் அதில் அரசியலை பார்க்கக்கூடாது என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "அம்பேத்கர் வாழ்க்கை குறிப்பைப் பற்றிய ஒரு புத்தகத்தின் முன்னுரையில், அம்பேத்கரின் வாழ்வியல் சிந்தாந்தங்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செய்து கொண்டிருப்பதாக ஒரு வார்த்தையை இளையராஜா கூறினார்.

இந்தக் கருத்தை இந்தியா முழுவதுமே பல பெரிய மனிதர்கள் உள்பட பலதரப்பட்ட மனிதர்கள் கூறுகின்ற ஒரு கருத்து. இது புதிது கிடையாது. இதே இளையராஜா, கோவையில் தனது பிறந்தநாள் விழாவில், நமது மாநில அரசை பற்றிக்கூட பேசியிருந்தார். மாநில அரசு நன்றாக பணி செய்வதாககூடப் பேசியிருந்தார். அது எல்லாமே அவருடைய தனிப்பட்ட கருத்தாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

இளையராஜா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து ஒரு கருத்து கூறினார் என்றால், என்னைப் பொருத்தவரை, அது தனிப்பட்ட கருத்து. அதேபோல பிரதமர் மோடி குறித்து ஒரு கருத்து கூறினாலும் அதுவும் அவருடைய தனிப்பட்ட கருத்து. இதில் எதிலுமே அரசியல் கலக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவருடைய பார்வையை அவர் கூறுகிறார். தமிழகத்தில் அரசியலில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சி நண்பர்கள் எப்படி ஆகிவிட்டனர் என்றால், இளையராஜாவின் தனித்திறமையால் கிடைத்திருக்கக்கூடிய ஒரு அங்கீகாரத்தைக்கூட, கொச்சைப்படுத்த முயற்சிக்கிறார்கள், இது மிகவும் வேதனையாக இருக்கிறது. சாதி, மதத்திற்குள் அடைக்கக்கூடாத ஒரு மாமனிதன் இளையராஜா" என்று அவர் தெரிவித்தார்.


Next Story