ரூ.700 கோடிக்கு மருந்து வாங்கியது குறித்து விசாரணை நடத்த பரிந்துரை; சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் பேட்டி


ரூ.700 கோடிக்கு மருந்து வாங்கியது குறித்து விசாரணை நடத்த பரிந்துரை; சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் பேட்டி
x

“தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் காலாவதி தேதி குறிப்பிடாமல் ரூ.700 கோடிக்கு மருந்து வாங்கியது குறித்து விசாரணை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்” என்று செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கூறினார்.

திருநெல்வேலி

"தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் காலாவதி தேதி குறிப்பிடாமல் ரூ.700 கோடிக்கு மருந்து வாங்கியது குறித்து விசாரணை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்" என்று செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கூறினார்.

சட்டமன்ற கணக்கு குழு ஆய்வு

தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் காந்திராஜன் (வேடசந்தூர்), சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னார்கோவில்), வேல்முருகன் (பண்ருட்டி), ஜவாஹிருல்லா (பாபநாசம்), அப்துல்வகாப் (பாளையங்கோட்டை), ராஜா (சங்கரன்கோவில்) ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

நெல்லை வீரமாணிக்கபுரத்தில் சமூக நலத்துறை சார்பில் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை, ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதி மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மூலம் நடந்து வரும் நேருஜி கலை அரங்கம் கட்டும் பணி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மருத்துவ உபகரணம்

பின்னர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்ற பொதுக்கணக்கு குழு நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டோம். இதில் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2017-2018 ம் ஆண்டு நார்வே நாட்டில் இருந்து டெங்கு, மலேரியா காய்ச்சல் ஆகியவற்றை பரிசோதனை செய்யும் மருத்துவ உபகரணம் ரூ.4 கோடியே 29 லட்சத்திற்கு வாங்கப்பட்டு பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய, மாநில கணக்காயக்குழு ஆய்வு செய்து இந்த உபகரணத்தால் அரசுக்கு பணம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தங்களது அறிக்கையில் கூறியுள்ளது. இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்ட போது 45 பைசாவில் செய்ய கூடிய சோதனையை இந்த உபகரணம் மூலம் செய்தால் 28 ரூபாய் செலவாகிறது. இதனால் இந்த உபகரணத்தை செயல்படுத்தாமல் போட்டுள்ளோம் என தெரிவித்துள்ளனர். எனவே, மக்களுக்கு பயன்படாத, அரசுக்கு பண இழப்பை ஏற்படுத்தி இந்த உபகரணம் வாங்கப்பட்டுள்ளது. இதுபோன்று மாவட்டத்தில் நான்கு மருத்துவமனைக்கு வாங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த உபகரணம் வாங்க காரணமாக இருந்தவர்கள் யார்? என கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க குழு பரிந்துரை செய்யும்.

ரூ.700 கோடி

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் மருந்துகள் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் மருந்து உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து மருந்து, மாத்திரைகள் வாங்கப்பட்டு நோயாளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த காலாவதி தேதி குறிப்பிடாமல் மருந்து, மாத்திரைகளை ரூ.700 கோடிக்கு வாங்கி உள்ளனர். எனவே, அரசுக்கு பண இழப்பு செய்த சம்பவம் குறித்து விசாரணை குழு அமைத்து, விசாரணை மேற்கொள்ள தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர்-அதிகாரிகள்

இந்த ஆய்வில் கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, குழு தனி அதிகாரி ராஜா, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாநகராட்சி உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாட்ஷா, உதவி பொறியாளர் அருள், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை, த.மு.மு.க.மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கூட்டம்

இதைத்தொடர்ந்து சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து துறை ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர். குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசு அதிகாரிகள் உடனுக்குடன் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

மேலும் நெல்லை தாலுகா அலுவலகத்தில் ஆய்வுக்கு சென்ற போது அங்கு அங்கு முதியோர் உதவித்தொகை கேட்டு 2 மூதாட்டிகள் வந்திருந்தனர். அவர்களுக்கு உடனே முதியோர் உதவித்தொகை வழங்க செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. உத்தரவிட்டார்.


Next Story