கடலூரில் சமரச வார விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடலூரில் சமரச வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சமரச விழிப்புணர்வு வார விழா ஏப்ரல் 10-ந் தேதி (அதாவது நேற்று) முதல் 13-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை சமரச மையம் உத்தரவின்படி கடலூர் மாவட்ட சமரச மையம் சார்பில் கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று சமரச வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர் தலைமை தாங்கி, சமரசம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, வக்கீல்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
மேலும் வழக்குகளுக்கு சமரச மையத்தில் சுமூகமான தீர்வு காணப்பட்டால், முழு நீதிமன்ற கட்டணத்தையும் திரும்ப பெறலாம். சமரச மையத்தில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகளும், எவ்வகையிலும் பதிவு செய்யப்பட மாட்டாது, ரகசியம் காக்கப்படும். சமரசத்தில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் ஒருவருக்கு எதிராக சாட்சியங்களாக பயன்படுத்தப்படமாட்டாது என்பது உள்படசமரச மையத்தின் மூலம் தீர்வு காண்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் மாவட்ட சமரச மைய செயலாளர் லிங்கம் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் சங்க தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.