காணாமல் போன ரூ.8 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு


காணாமல் போன ரூ.8 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு
x

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் தொலைந்து போன ரூ.8 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் தொலைந்து போன ரூ.8 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

ரூ.8 லட்சம் செல்போன்கள் மீட்பு

மதுரை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போன செல்போன்களை உடனே கண்டு பிடிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 2 மாதங்களில் காணாமல் போன செல்போன்கள் சைபர் கிரைம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. அதில் 8 லட்சத்து 800 ரூபாய் மதிப்புள்ள 50 செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் வழங்கினார்.

மேலும் அவர் கூறும் போது, இதுவரை ரூ.1 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரத்து 650 மதிப்புள்ள 1,027 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விவரங்களை தெரிந்து கொண்டு நூதனமான முறையில் நடந்த திருட்டு வழக்குகளில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையால் கடந்த ஒரு மாதத்தில் ரூ.6 லட்சத்து 26 ஆயிரத்து 699-மீட்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இது போன்ற வழக்குகளில் மொத்தம் ரூ.41 லட்சத்து 46 ஆயிரத்து 399 மீட்கப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண இரட்டிப்பு அளிக்கும் முதலீடு

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வோடு இருக்கவும், வங்கிகணக்கு எண், சி.வி.வி. மற்றும் ஒ.டி.பி. போன்ற விவரங்களை முன்பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் பண இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் முதலீடு தொடர்பான இணையதளங்களை நம்பியும், ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். குறைந்த அசலுக்கு அதிக வட்டி பெறும் லோன் ஆப்களிடம் பணம் பெற்று ஏமாற வேண்டாம். தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ கால்லை எடுக்க வேண்டாம்.

வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்யுமாறு செல்போனில் வரும் எவ்வித தகவலையும் பதிவேற்றம் செய்ய வேண்டாம். இது போன்று யாரேனும் பணம் இழக்க நேர்ந்தால் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணிநேரமும் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story