வடமாநில வாலிபரால் சித்ரவதை: குழந்தையுடன் மீட்கப்பட்ட இளம்பெண் பெருந்துறை வந்தார்- 'பொய் காதலால் பெற்றோரை உதறிவிட்டு செல்லாதீர்கள்' என பேட்டி
வடமாநில வாலிபரால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட இளம்பெண் குழந்தையுடன் பெருந்துறை வந்தார். பொய் காதலால் பெற்றோரை உதறிவிட்டு செல்லாதீர்கள் என அவர் கூறினார்.
பெருந்துறை
வடமாநில வாலிபரால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட இளம்பெண் குழந்தையுடன் பெருந்துறை வந்தார். பொய் காதலால் பெற்றோரை உதறிவிட்டு செல்லாதீர்கள் என அவர் கூறினார்.
காதல்
பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி பாலக்கரையைச் சேர்ந்த சுந்தர்ராஜ். அவருடைய மகள் சுபத்ரா (வயது 23). இவர்
பெருந்துறை பாலக்கரையில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை பார்த்தார். இதே நூற்பாலையில் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள அம்தோப் பகுதியை சேர்ந்த சுப்ரதாஸ் (27). என்பவரும் வேலை பார்த்தார். இதனால் சுப்ரதாசும், சுபத்ராவும் காதலித்து வந்தனர். பின்னர் சுப்ரதாஸ் சுபத்ராவை தன்னுடன் கொல்கத்தா அழைத்து சென்று திருமணம் செய்தார்.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சுப்ரதாஸ் சுபத்ராவை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக சுபத்ரா தன் பெற்றோருக்கு வீடியோ அனுப்பினார். இதை பார்த்த சுபத்ராவின் பெற்றோர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் பெருந்துறை போலீசார் கொல்கத்தா சென்றனர். பின்னர் சுபத்ராவை சுப்ரதாசிடம் இருந்து மீட்டு பெருந்துறைக்கு நேற்று அழைத்து வந்தனர்.
அப்போது சுபத்ரா தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது-
நரகத்தில்....
எனது கணவர் சுப்ரதாஸ் அவரது உறவு பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். இதனால் என்னை கொடுமைப்படுத்தினார். நான் இதுகுறித்து என் பெற்றோருக்கு செல்போனில் வீடியோ அனுப்பினேன். அவர்கள் போலீசாரிடம் தெரிவித்து என்னையும், என் குழந்தையையும் பத்திரமாக பெருந்துறைக்கு அழைத்து வந்துள்ளார்கள். இங்கு வந்த பிறகுதான், நான் இயல்பான நிலைக்கு வந்துள்ளேன். என் வயதுள்ள மற்ற பெண்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், தயவு செய்து இதுபோன்ற வடமாநில வாலிபர்களுடன் பழகாதீர்கள். அவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கி பொய் காதலால் பெற்றோரை உதறிவிட்டு சென்று நரகத்தில் விழுந்து விடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பிறகு, பெருந்துறை போலீசார் சுபத்ராவின் பெற்றோரை வரவழைத்து, சுபத்ராவை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.