12 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ஊட்டி அருகே 12 ஏக்கர் ஆக்கிரப்பு நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டு நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி,
ஊட்டி அருகே 12 ஏக்கர் ஆக்கிரப்பு நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டு நடவடிக்கை எடுத்தனர்.
ஆக்கிரமிப்பு நிலங்கள்
தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 வருவாய் கோட்டங்களில் கால்வாய்கள், நீரோடைகள், அணைகள் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர்.
தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அங்கு விவசாயம் ஏதேனும் செய்திருந்தால் பயிர்கள் அப்புறப்படுத்தப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஊட்டி தாலுகாவிற்கு உட்பட்ட ஆடாசோலை பகுதியில் மேய்ச்சல் நிலம் என்ற வகைப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலம் 12 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
12 ஏக்கர் நிலம்
இதுதொடர்பாக ஆக்கிரமிப்பு நிலத்தில் விவசாய பணிகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது. நிலத்தில் இருந்து வெளியேறுமாறும், வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும், ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறவில்லை.இதைதொடர்ந்து ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் இளங்கோகில குரு, கிராம நிர்வாக அலுவலர் ரசியா பேகம் மற்றும் வருவாய்த்துைறயினர் அப்பகுதிக்கு சென்று நிலத்தை ஆய்வு செய்து அளவீடு செய்தனர்.
ஆக்கிரமிப்பில் இருந்த 12 ஏக்கர் நிலத்தில் கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த இடம் மீட்கப்பட்டு, மேய்ச்சல், நீர்நிலை புறம்போக்கு என்ற பதிவினை கொண்ட அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. இதில் அத்துமீறி யாரும் நுழைய கூடாது. மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறும்போது, ஊட்டி தாலுகாவில் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்க கூடாது, என்றனர்.