ஆக்கிரமிப்பில் இருந்த 2 குளங்கள் மீட்பு
குடவாசல் அருகே, அதிகாரிகள் நடவடிக்கையால் ஆக்கிரமிப்பில் இருந்த 2 குளங்கள் மீட்கப்பட்டன.
குடவாசல்:
குடவாசல் அருகே, அதிகாரிகள் நடவடிக்கையால் ஆக்கிரமிப்பில் இருந்த 2 குளங்கள் மீட்கப்பட்டன.
குளங்கள் ஆக்கிரமிப்பு
குடவாசல் ஒன்றியம் சிமிழி ஊராட்சியில் ஊராட்சிக்கு சொந்தமான 2 குளங்களை கடந்த 50 ஆண்டுகளாக சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இது குறித்து ஊராட்சி தலைவர் சிவசுப்ரமணியன், பொதுமக்கள் உதவியுடன் மாவட்ட கலெக்டரிடம், இந்த 2 குளங்களையும் மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதையடுத்து கடந்த ஆண்டு தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.
அதிகாரிகள் மீட்டனர்
இந்த நிலையில் நேற்று தாசில்தார் குருநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், சாமிநாதன், ஊராட்சி தலைவர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் முன்னிலையில் 2 குளங்களையும் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்டு, ஊராட்சி தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து ஊராட்சி சார்பில் மீன்பாசி குத்தகைக்கு விடப்பட்டது. இதுகுறித்து ஊராட்சி தலைவர் கூறுகையில், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட இந்த குளத்தில் கிடைக்கும் வருமானம் ஊராட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்றார்.