அறநிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் மீட்பு
கொள்ளிடம் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
கைலாசநாதர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சோதியக்குடி மற்றும் கோபாலசமுத்திரம் ஆகிய கிராமங்களில் 4 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது.
இந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாாிகள் கோவிலின் நில ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த நிலங்களை மீட்பதற்கு மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.
ரூ.1 கோடியே 20 லட்சம்
நேற்று மயிலாடுதுறை தனி தாசில்தார் விஜயராகவன் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, கோவில் செயலாளர் அன்பரசன், ஆய்வாளர் பிரனேஷ், கணக்கர் ராஜி ஆகியோர் ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்கள் மீட்கப்பட்டு கோவில் வசப்படுத்தப்பட்டது.
மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ. 1 கோடியே 20 லட்சம் ஆகும். இந்த நிலங்கள் இணை ஆணையரின் அனுமதி பெற்று கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் முதல் முறையாக ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மீட்கப்பட்ட இந்த நிலங்களில் யாரும் அத்து மீறி பிரவேசிக்கக் கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட இடத்தில் இது குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.