ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான வணிக கட்டிடம் மீட்பு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான வணிக கட்டிடம் மீட்கப்பட்டது.
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருக்கோவில் சொத்துக்களும் தனிநபர்களால் அபகரிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான சென்னை தங்கசாலைத் தெருவில் உள்ள வணிக கட்டிடத்தை தனி நபர் ஒருவர் பயன்படுத்தி வந்தார். இவர் கோவில் சொத்தை பயன்படுத்தியதற்காக வாடகை, இழப்பீடு கட்டணம் செலுத்த கோவில் நிர்வாகம் சார்பில் பலமுறை நேரில் அறிவித்தும், அறிவிப்பு அனுப்பியும் இழப்பீடு தொகையை செலுத்தவில்லை. வெளியேறவும் இல்லை. இதையடுத்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உத்தரவின்பேரில் அந்த தனி நபரிடம் இருந்து வணிக கட்டிடத்தை கடந்த வெள்ளிக்கிழமை அன்று மீட்டு 'சீல்' வைக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.