கோயம்பேட்டில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் மீட்பு; கொலையா? என போலீஸ் விசாரணை
கோயம்பேட்டில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது. அவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆண் பிணம் மீட்பு
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலைய வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகில் சீனிவாச நகர் உள்ளது. இந்த பகுதியில் இருந்து மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர்
அங்கு உடல் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. உடலில் பாதி எலும்பு கூடுகளாக காட்சி அளித்தது. உடல் ஒரு பகுதியிலும், தலை சற்று தூரத்திலும் கிடப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இறந்து கிடந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் இறந்து சுமார் 20 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்பதால் உடல் முழுவதும் அழுகி எலும்பு கூடாக மாறிவிட்டது. உடலின் அருகில் ஒரு கயிறு, மது பாட்டில், புடவை இருந்தது.
தலை துண்டித்து கொலையா?
எனவே பிணமாக கிடந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா? உடல் அழுகிய நிலையில் நாய்கள் கடித்ததில் தலை துண்டானதா? அல்லது யாராவது அவரை தலையை துண்டித்து கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக அந்த பகுதியில் காணாமல் போனதாக புகார்கள் ஏதாவது போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.