சின்ன திருப்பதியில் கொலையான மூதாட்டியிடம் பறிக்கப்பட்ட நகை மீட்பு


சின்ன திருப்பதியில் கொலையான மூதாட்டியிடம் பறிக்கப்பட்ட நகை மீட்பு
x

சின்ன திருப்பதியில் கொலையான மூதாட்டியிடம் பறிக்கப்பட்ட நகையை போலீசார் மீட்டனர்.

சேலம்

கன்னங்குறிச்சி:

சேலம் சின்ன திருப்பதி பாண்டியன் தெருவை சேர்ந்தவர் நசீர் ஜஹான் (வயது 82). இவர் கடந்த 4-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது 2 வாலிபர்கள் வீடு வாடகைக்கு கேட்பது போல் வீட்டுக்குள் வந்து மூதாட்டி நசீர் ஜஹானிடம் இருந்த 15½ பவுன் நகையை பறித்துக்கொண்டதுடன், அவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் நகைபறிப்பில் ஈடுபட்டதாக சின்ன திருப்பதியை சேர்ந்த முஸ்தபா (27), அஸ்தம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நசீர்ஜஹான் இறந்து விட்டதால் மூதாட்டியிடம் நகைபறிப்பு வழக்கை கொலை வழக்காக மாற்றி கன்னங்குறிச்சி போலீசார் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட முஸ்தபா, ராஜேந்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், முஸ்தபாவின் தாயார் மற்றும் அக்காள், கொலை செய்யப்பட்ட நசீர் ஜஹானின் வீட்டில் வேலை செய்து வந்ததாகவும், அவரை அழைக்க வரும் போது மூதாட்டியை கண்காணித்து கொள்ளையடித்ததாக தெரிவித்தனர். மேலும் மூதாட்டியை தாக்கியதில் அவர் இறப்பார் என நினைக்கவில்லை என்று கொள்ளையர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கொலையான மூதாட்டியிடம் பறிக்கப்பட்ட 4½ பவுன் நகையை போலீசார் மீட்டனர். இதையடுத்து விசாரணை முடிந்து அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த நகைப்பறிப்பு மற்றும் கொலை தொடர்பாக முஸ்தபாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினால் தான் உண்மையான தகவல் கிடைக்கும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story