மயானத்தில் ஆண் பிணம் மீட்பு


மயானத்தில் ஆண் பிணம் மீட்பு
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே மயானத்தில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி அருகே மயானத்தில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண் பிணம் மீட்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த எமரால்டு மயான பகுதியில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக எமரால்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கண்மணி உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்களும் அங்கு திரண்டனர்.

இதை தொடர்ந்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்து விட்டு ஒரு நபரின் உடலை மயானத்தில் வீசி சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

போலீசார் விசாரணை

எமரால்டு மயானத்தில் பிணமாக மீட்கப்பட்ட நபருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். 6 மாதத்திற்கு முன்பு உடலை இங்கு வீசி சென்று இருக்கலாம். கொலை செய்த பின்னர் உடலை கொண்டு வந்து வீசியது போல் தெரியவில்லை. ஏனென்றால் உடலை உற்று நோக்கும்போது, பிரேத பரிசோதனை செய்தது போல் தெரிகிறது. மேலும் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்த உடலை தான் பிளாஸ்டிக் கவரில் சுற்றி கொடுப்பார்கள்.

எனவே, ஏற்கனவே மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த உடலை இங்கு கொண்டு வந்து போட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் புதருக்குள் இருந்ததால் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story