ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.2 கோடி நிலம் மீட்பு
மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை நகரசபை தலைவர் சோழராஜன் மீட்டார்.
மன்னார்குடி:
மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை நகரசபை தலைவர் சோழராஜன் மீட்டார்.
78 ஏக்கர் நிலம்
மன்னார்குடி நகராட்சிக்கு வடுவூரில் இருந்து மன்னார்குடிக்கு குடிநீர் கொண்டு வர 14 கிலோமீட்டர் நீளத்திற்கு சுமார் 85 அடி அகலத்தில் 78 ஏக்கர் நிலம் 50 ஆண்டுகளுக்கு முன்பு மன்னார்குடி நகராட்சி சார்பில் வாங்கப்பட்டது. வடுவூர், செருமங்கலம், காரிக்கோட்டை, குமரபுரம், நகர எல்லையான ஜீயர் தோப்பு ஆகிய பகுதிகளில் இந்த நிலம் அமைந்துள்ளது. இதன் வழியாக சில ஆண்டுகள் குடிநீர் கொண்டு வரப்பட்ட நிலையில் நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு வந்த பிறகு இந்த பகுதி பயன்பாடு இன்றி கைவிடப்பட்டது. இதனால் நகராட்சிக்கு சொந்தமான இந்த பகுதி புஞ்சை நிலமாக மாற்றப்பட்டு பல்வேறு தனியார் ஆக்கிரமிப்பில் தற்போது அனுபவத்தில் உள்ளது.
ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
இதுகுறித்து அறிந்த மன்னார்குடி நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் நகராட்சிக்கு சொந்தமான இந்த நிலங்களை மீட்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து முதற்கட்டமாக மன்னார்குடியை அடுத்த காரிக்கோட்டை, குமரபுரம் பகுதியில் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தில் நேற்று எல்லை கற்கள் நடப்பட்டது.
நடவடிக்கை தொடரும்
எல்லை கற்கள் நடும் பணியினை நகர சபை தலைவர் மன்னை சோழராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறுகையில், முதற்கட்டமாக ஆக்கிரமிப்பில் இருந்த 6 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
இதுபோன்று தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு மீதமுள்ள அனைத்து நிலங்களும் மீட்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமாக்கப்படும் என தெரிவித்தார்.அப்பொழுது நகராட்சி துணைத் தலைவர் கைலாசம், நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.